×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ₹35.79 கோடியில் பள்ளி, பூங்கா, திடல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, மே 13: சென்னை மாநகராட்சியில் 35 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பள்ளி, பூங்கா மற்றும் விளையாட்டு திடல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சென்னை மாநகரின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் புதிய சாலைப் பணிகள் மேற்கொள்ளுதல், சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், சென்னை பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் நவீன கட்டமைப்புடன் கூடிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டுதல், புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள் கட்டுதல், பொதுக் கழிப்பிடங்கள் அமைத்தல், மக்களின் பொழுதுப்போக்கிற்காகவும், மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் பசுமையான செடிகள், மரங்களுடன் கூடிய புதிய பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல், விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டுத் திடல்கள் அமைத்தல், சென்னை மாநகரை தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் நாள்தோறும் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல், நீர்நிலைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில் தண்டையார்பேட்டை சர்மா நகரில் உள்ள சென்னை உயர்நிலை பள்ளி மற்றும் சென்னை தொடக்கப் பள்ளியை 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவிலும், ராயபுரம் கல்லறை சாலை மணிகண்டன் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி மற்றும் சென்னை தொடக்கப் பள்ளியை 4 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவிலும், அண்ணா நகர் செனாய் நகர், சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் சென்னை தொடக்கப் பள்ளியை 4 கோடி ரூபாய் செலவிலும், அடையாறு – காந்தி கிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியை 2 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவிலும் புதுப்பிக்கப்பட்ட பள்ளிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதேபோல், அம்பத்தூர் வானகரம் சாலை, அத்திப்பட்டில் உள்ள திறந்தவெளி நிலம், டி.ஐ. சைக்கிள் சாலை ரயில் விஹார் குடியிருப்பில் திறந்தவெளி நிலம், தாமிரபரணி தெருவில் உள்ள புது செஞ்சுரி மருத்துவமனை திறந்தவெளி நிலம், எம்ரால்டு பிளாட்ஸ் மின்வாரிய அலுவலகம் அருகிலுள்ள திறந்தவெளி நிலம், நாராயணா நகர் திறந்தவெளி நிலம், டி.வி.எஸ் அவென்யு 34வது தெருவிலுள்ள திறந்தவெளி நிலம், திருமங்கலம் ரோட்டின் எச்.ஐ.ஜி பிளாட்ஸ் திறந்தவெளி நிலம், சோழிங்கநல்லூர் – நூக்கம்பாளையம் இணைப்பு சாலை (மைக்ரோ சிப் ஐ.டி நிறுவனம் அருகில்), விநாயகா நகர் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் பவுண்டரி தெரு, வளசரவாக்கம் – நொளம்பூர் எஸ் & பி கார்டன் 8வது தெரு மற்றும் ராமாபுரத்தில் திருவள்ளுவர் சாலை, மாதவரம் – தாங்கல் கரை சாலை, மாதவரம் – மீனாம்பாள் அவென்யு (சாஸ்திரி நகர்), ஜெய் மாருதி நகர் (மேற்கு), மேட்டூர் இணைப்புச் சாலை (எஸ்.ஐ.எஸ்.) கேப்டவுன், அடையாறு லீலா பேலஸ், சோமர்செட், ஜெயின் சகாரீகா ஆகிய இடங்களில் 9 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 19 புதிய பூங்காக்களையும், சோழிங்கநல்லூர் சக்தி நகரில் 81 லட்சம் ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்ட ஒரு பூங்காவையும் முதல்வர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, ராயபுரம் காட்பாடா பிரதான சாலையில் உள்ள திறந்தவெளி நிலம், மாதவரம் – மாதவரம் ரிங் ரோடு மற்றும் எம்.ஜி.ஆர். 2வது தெரு, ஆலந்தூர் சேதுலட்சுமி அவென்யு, மதுரவாயல் கங்கா நகரில் உள்ள காந்தி தெரு ஆகிய இடங்களில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 புதிய விளையாட்டுத் திடல்களையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், கொடுங்கையூர் வார்டு 35, ராயபுரம் ராட்லர் தெரு (பெருமாள்பேட்டை) மற்றும் கொண்டித்தோப்பு, திரு.வி.க. நகர் வ.உ.சி. நகர் 1வது தெருவில் புளியந்தோப்பு, அம்பத்தூர் முகப்பேர் மேற்கு காளமேகம் சாலை ஆகிய இடங்களில் 10 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பொன்னையா, ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை மாநகராட்சி பகுதிகளில் ₹35.79 கோடியில் பள்ளி, பூங்கா, திடல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thital ,Chennai ,Municipal Corporation ,Chief Minister ,M.K.Stalin ,Corporation ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி...